

அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து நாட்டை வழிநடத்த புதிய தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம் செய்யப்பட்டார். மொஜ்தபா கமேனி பதவியேற்று 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் அவர் இன்னமும் பொதுவெளியில் தலைகாட்டவில்லை. இதனால் அவர் எங்கு இருக்கிறார். அவரது உடல்நிலை என்ன என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மொஜ்தபா கமேனி உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது:- மொஜ்தபா கமேனி உயிரிழந்து இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் மிக கடுமையாக காயம் அடைந்து இருப்பார்.உடலின் இடது பக்கம், முழங்கை மற்றும் கால் ஆகிய பகுதிகள் காயம் அடைந்து இருக்கும். அதே நேரத்தில் அவர் உயிரிழந்து இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. மொஜ்தபா கமேனி ஒருவேளை உயிருடன் இல்லையென்றால், ஈரான் மிக சிறந்த ஒரு நாடகத்தை அரங்கேற்றி கொண்டு இருக்கிறது" என்றும் டிரம்ப் தனது பேட்டியில் கூறினார்
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயம் அடைந்ததாகவும் அப்போது முதல் அவர் பொதுவெளிக்கு வரவில்லை என்றும் பல்வேறு தகவல்களும் கூறுகின்றன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 6 மாதத்திற்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. விரைவில் போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த பொருளாதார அழுத்தங்கள் பலன் கொடுப்பதாக கூறியிருக்கும் டிரம்ப், விரைவில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறந்து இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்