ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு இல்லை - உலக சுகாதார அமைப்பு தகவல்

ஒமைக்ரான் வைரஸ் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு இல்லை - உலக சுகாதார அமைப்பு தகவல்
Published on

ஜெனீவா,

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது. கர்நாடகா, குஜராத், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் 5 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய விதிமுறையின்படி, ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனைகள் கட்டாயம் எடுக்கப்படுகிறது. அதன் முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பிற நாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் தோராயமாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தொற்று பாதிப்பால் இதுவரை இறப்பு எண்ணிக்கை இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 375 பேர் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒமைக்ரான் வைரஸை நாம் எதிர்கொள்ள தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் அதே நேரம் பயப்படாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும் இந்த உருமாறிய வைரஸ் குறித்து தற்போது உறுதியாக கணித்து சொல்ல முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருந்தாலும் பலி இதுவரை இல்லை என்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com