சினோபார்ம் தடுப்பூசி மருந்தை உடலில் செலுத்தி கொண்டவர்களில் இதுவரை இறப்பு பதிவு செய்யப்படவில்லை; அபுதாபி ஆய்வில் தகவல்

சினோபார்ம் தடுப்பூசி மருந்தை உடலில் செலுத்தி கொண்டவர்களில் இதுவரை இறப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
சினோபார்ம் தடுப்பூசி மருந்தை உடலில் செலுத்தி கொண்டவர்களில் இதுவரை இறப்பு பதிவு செய்யப்படவில்லை; அபுதாபி ஆய்வில் தகவல்
Published on

இது குறித்து அபுதாபி பொது சுகாதார மையத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:-

அபுதாபியில் பொது சுகாதார மையத்தின் சார்பில் சினோபார்ம் தடுப்பூசி மருந்தின் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ஆய்வின் முடிவுகளில் சினோபார்ம் மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் தொற்று காரணமாக லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற தேவையில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அமீரகத்தில் சினோபார்ம் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக புதிய நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது புள்ளி விவரங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆய்வில் சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 93 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்வது 95 சதவீதமும் தடுக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக இதுவரை சினோபார்ம் தடுப்பூசி மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களில் இறப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

சினோபார்ம் தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி, உடலில் அதிக நாட்கள் ஒட்டிக்கொள்வதன் மூலம் சிறந்த எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் அந்த தடுப்பூசியானது 90 சதவீதம் நோய் தொற்றை தடுப்பதில் அதிக ஆற்றல் உடையது. எனவே இந்த தடுப்பூசி மருந்து கொரோனா பரவலை தடுப்பதில் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது.

சினோபார்ம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் தற்போதுள்ள கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளில் சினோபார்ம் உலகின் மிகச்சிறந்த மருந்தாகும்.

நாடு முழுவதும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் விரைந்து சென்று தடுப்பூசியை பெற்று கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com