

கொழும்பு,
இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த மாத துவக்கத்தில் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிய இலங்கை, இந்த தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனத்துக்கு மேலும் லட்சக்கணக்கான டோஸ்களுக்கு ஆர்டர் கொடுத்தது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒரு புத்த துறவி உள்பட 3 பேர் இறந்தனர். ஆனால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளால்தான் இறந்தனர், தடுப்பூசி போட்டதால் உயிரிழக்கவில்லை. இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எவருமே இறக்கவில்லை என்று அந்நாட்டின் ஆரம்ப சுகாதார சேவைகள் மந்திரி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
முன்னதாக சுவீடன், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பல்கேரியா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் அந்த தடுப்பூசி போடுவதால் ஆபத்தில்லை, அதை தொடரலாம் என்று உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்டவை அறிவித்தன.