

லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. அதே சமயம் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக அங்குள்ள பிரபில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அங்கு பள்ளிகள் வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளை திறந்த முதல் வாரத்தில் மாணவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இங்கிலாந்தின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழுவின் ஆலோசனையை பெற்ற பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும் என இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.