

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33 ஆயிரம் கோடி) ராணுவ நிதியுதவியை 2026-ம் ஆண்டின் இறுதியுடன் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாக வலுவான நாடாக இருப்பதால் அந்த நாட்டுக்கு அமெரிக்காவின் நிதியுதவி தேவையில்லை . இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடரும் என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கா உதவி செய்யும்” என்றார்.
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே கடந்த 2016-ம் ஆண்டு 10 ஆண்டுகளுக்கான ராணுவ உதவி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 2019 முதல் 2028-ம் ஆண்டு வரை மொத்தம் 38 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இதில் ஆண்டுக்கு 3.3 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியாகவும், 500 மில்லியன் டாலர் ஏவுகணை பாதுகாப்புத் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 2028-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அமலில் உள்ளது. எனவே, ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பே நிதியுதவியை நிறுத்துவது தொடர்பாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
டிரம்பின் அறிவிப்புக்கு இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான முக்கிய பாதுகாப்பு உறவில் மாற்றம் ஏற்படுவது குறித்து இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையினரும் மக்களும் ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் நிதியுதவி படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.