இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது... அதிபர் கிம் போட்ட உத்தரவால் குழப்பத்தில் வடகொரிய மக்கள்


இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது... அதிபர் கிம் போட்ட உத்தரவால் குழப்பத்தில் வடகொரிய மக்கள்
x

‘ஐஸ்கிரீம்’ என்பதற்கு பதிலாக ‘எசெக்கிமோ’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பியாங்யாங்,

வடகொரியாவில் பிற மொழிகளின் ஆதிக்கத்தை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் வேற்றுமொழி வார்த்தைகளை நீக்கிவிட்டு, அதற்கு இணையான, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொற்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வடகொரிய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், வடகொரியாவில் இனி ‘ஐஸ்கிரீம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என அந்நாட்டு அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக ‘எசெக்கிமோ’ அல்லது ‘எரெம்போசங்கி’ என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வடகொரிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக சுற்றுலா வழிகாட்டிகள் இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வடகொரியாவில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகளுக்கு தற்போது 3 மாத சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வடகொரியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் எவ்வாறு பேச வேண்டும், எந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், சுற்றுலா பயணிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.

இருப்பினும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அவர்களுக்கு புரியும் மொழியில் தானே பேச முடியும் என பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலா வழிகாட்டி ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அரசின் கொள்கை முடிவுகள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அங்குள்ள மக்கள் யாரும் இது குறித்து வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்கவில்லை.

‘எசுக்கிமோ’ என்ற வார்த்தையானது அலாஸ்கா, சைபீரியா, கிரீன்லாந்து உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் பூர்வக்குடி மக்களை குறிக்கும் ‘எஸ்கிமோ’ என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல், ‘ஹாம்பர்கர்’ என்ற உணவுப்பொருளின் பெயரை ‘டாஜின்-காகி கியோபாங்’ என்று வடகொரிய அரசு மாற்றியுள்ளது. தென்கொரிய மொழி மற்றும் பிற மேற்கத்திய மொழிகளின் ஆதிக்கத்தை குறைத்து, வடகொரிய மொழி மற்றும் கலாசாரத்தை முன்னிலைப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story