போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு

கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்களுக்கு, அந்நாட்டு சட்டத்தின்படி, தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.
போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு
Published on

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களில் இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. நிலைமை சீரான பின்னர் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,428 பேர் பலியாகி உள்ளனர் என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டு பொதுசொத்துகளை சூறையாடுபவர்கள், கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அந்நாட்டு தண்டனை சட்டத்தின்படி, கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.

இதற்கேற்ப, ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே கராஜ் பகுதியில் கடந்த வாரம் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட எர்பான் சொல்தானி (வயது 26) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் எந்தவித முறையான விசாரணையும் இன்றி தூக்கில் போடப்படுகிறார் என தகவல் வெளியானது.

எர்பானுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தகவல் அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

இதுபற்றி அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி கூறும்போது, போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com