ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்த 24 மணிநேரத்தில் எந்த கப்பலும் பயணிக்கவில்லை; அறிக்கை தகவல்

அமெரிக்கா-ஈரான் போருக்கு முன்பு வரை சராசரியாக தினமும் 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்து செல்லும்.
ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்த 24 மணிநேரத்தில் எந்த கப்பலும் பயணிக்கவில்லை; அறிக்கை தகவல்
Published on

வாஷிங்டன்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

இந்நிலையில், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை இருபுறமும் அமெரிக்காவின் கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. எனினும், ஈரானும் அந்த பகுதியில் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்த பகுதியை எரிசக்தி, உணவு வினியோகத்திற்கான சரக்குகள் போன்றவற்றை கொண்டு செல்லும் கப்பல்கள் அதற்கு ஈடாக, சுங்க கட்டணம் மற்றும் வரிகளை ஈரானுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என ஈரான் தெரிவித்தது.

இந்த சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்த 24 மணிநேரத்தில் எந்த கப்பலும் பயணிக்கவில்லை என கடல்சார் போக்குவரத்துக்கான அமைப்பு வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. அமெரிக்கா-ஈரான் போருக்கு முன்பு வரை சராசரியாக தினமும் 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்து செல்லும்.

இதேபோன்று, ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் செல்ல கூடிய கப்பல்களை ஈரான் தாக்குவது மற்றும் சட்டவிரோத சுங்க வரி விதிப்பது நிறுத்தப்பட வேண்டும். கப்பல்கள் சுதந்திரத்துடன் பயணம் செய்ய அனுமதிக்கும் வகையில், அனைத்து கண்ணிவெடிகளையும் ஈரான் அகற்ற வேண்டும் என வளைகுடா நாடுகள் கூறி வருகின்றன.

அவற்றை ஈரான் நிறுத்தவில்லை என்றால், அந்நாட்டை அச்சுறுத்தும் வகையிலான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளை கொண்ட தீர்மானம் ஒன்றை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டாக கூறி வருகின்றன.

ஹார்மூஸ் ஜலசந்தியில், போருக்கு முன்பிருந்த போக்குவரத்து நிலை திரும்ப வேண்டும் என கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை தூதர்கள் வலியுறுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com