

வாஷிங்டன்,
அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை நாடான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டன், கத்தார் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே ஈரான் உள்துறை மந்திரி எஸ்கந்தர் மொமேனி, அமெரிக்காவுடனான மோதலைத் தணித்து, முறிந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இஸ்லாமாபாத்துக்கு நேரில் சென்று ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகிய மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு எந்த விருப்பமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், முறையான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராகும் வரை சந்திப்பில் எங்களுக்கு ஆர்வம் இல்லை” என்றார். மேலும், போரினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை முடிவுக்கு கொண்டுவரவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு துடிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். தற்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமடைந்துள்ளதால், தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.