சவூதி அரேபியா: 14 பேர் மரண தண்டனையை நிறுத்த நோபல் அறிஞர்கள் கோரிக்கை

சவூதி அரேபியாவில் 14 பேரின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க பத்து நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவூதி அரேபியா: 14 பேர் மரண தண்டனையை நிறுத்த நோபல் அறிஞர்கள் கோரிக்கை
Published on

துபாய்

சவூதியில் 14 ஷியா பிரிவு நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்நாட்டு சட்டப்படி மன்னரின் அனுமதி பெற்றே மரண தண்டனையை நிறைவேற்ற முடியும். நோபல் பரிசு பெற்ற பத்து அறிஞர்கள் அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோரிடம் விடுத்துள்ள கோரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இரக்கம் காட்டும்படி யும் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும்படியும் கோரியுள்ளனர்.

இவர்களைப் போலவே சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமை கண்காணிப்பு அமைப்பும் சவூதி அதிகாரிகள் கொடுமைப்படுத்தியே 14 பேரின் வாக்குமூலங்களை வாங்கியதாகவும், அதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவும், அப்போது ஆயுதம் ஏந்திய கலவரம் உட்பட கலவரம், திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அரசு இவர்களை கைது செய்தது.

கோரிக்கையில் கையொப்பமிட்ட நோபல் பரிசு பெற்ற அறிஞர்களில் தென் ஆப்பிரிக்காவின் டெஸ்மண்ட் டுடூ, இந்தியாவின் கைலாஷ் சத்தியார்த்தி, ஏமனின் பெண் சமூக ஆர்வலர் தாவாகுல் கர்மான், ஈரானிய சட்ட அறிஞர் ஷிரீன் எபாடி ஆகியோரும் அடங்குவர். தவிர கையொப்பம் இட்டவர்களில் அமெரிக்க கண்ணிவெடி எதிர்ப்பு போராளி ஜோடி வில்லியம்ஸ், முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் டி கிளார்க், போலந்து முன்னாள் அதிபர் லீச் வலேசா ஆகியோரும் இடம் பெற்றுளனர்.

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கின்றனர். மேலும் இந்த கிழக்குப் பகுதியில்தான் சவூதி பெருவாரியான எண்ணெய் வளமும் உள்ளது. சன்னி இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் சவூதியில் கிழக்குப் பகுதி ஷியாக்கள் போராட்டம் நடத்துவது பெரும் பதற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடா பகுதியில் ஜனநாயகம் கோரி 2011 ஆம் ஆண்டில் நடந்த போராட்டங்களுக்கு இணையாக சவூதியிலும் போராட்டம் நடந்தது. அதுவும் கிழக்குப் பகுதியில்தான் நடந்தது. இதையொட்டியே கைதும், மரண தண்டனையும் நடந்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் பல்கலைக்கழக மாணவராக இருந்த ஒருவரும் அடங்குவார். ஏற்கனவே இப்போராட்டங்கள் தொடர்பாக சமூக வலைதளத்தில் பக்கம் ஒன்றைத் துவங்கிய குற்றச்சாட்டில் நிமிர் எனும் ஷியா மதகுருவும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்குள்ளானர்.

சவூதியிலேயே உலகில் அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாண்டில் இதுவரை 75 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com