வடகொரியா-தென்கொரியா இடையே மீண்டும் தகவல் தொடர்பு

வடகொரியா-தென்கொரியா இடையே தகவல்தொடர்பு மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் இருதரப்பு உறவை மேம்படுத்தவும் இரு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
வடகொரியா-தென்கொரியா இடையே மீண்டும் தகவல் தொடர்பு
Published on

வடகொரியா-தென்கொரியா மோதல்

1950-களில் நடந்த கொரிய போரின் போது வடகொரியாவும், தென்கொரியாவும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான பகைமை நிலவி வந்தது.இந்த சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு இருநாடுகள் இடையிலான பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை.கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் மீண்டும் மோதல் வலுக்க தொடங்கியது. இதற்கு காரணம் வடகொரியாவில் இருந்து தப்பி

தென்கொரியா சென்ற வடகொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வடகொரிய அரசை விமர்சிப்பது போன்ற துண்டு பிரசுரங்களை ஹீலியம் பலூன்கள் மூலம் வடகொரியாவுக்கு அனுப்பியதுதான்.

தகவல் தொடர்பு அலுவலகம் தகர்ப்பு

இதுதொடர்பாக வடகொரியா, தென்கொரியா அரசை பலமுறை எச்சரித்தபோதும் துண்டு பிரசுரங்கள் அடங்கிய ஹீலியம் பலூன்களை வடகொரியாவுக்கு அனுப்புவது தொடர்ந்தது. இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரிய எல்லையில் கேசாங் நகரில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் இருந்த இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிகுண்டு வைத்து தகர்த்தது. மேலும் தென்கொரியாவுடனான தகவல் தொடர்பு பாதையை வடகொரியா துண்டித்தது. இதனால் இரு நாடுகள் இடையிலான தகவல் தொடர்பு முற்றிலுமாக முடங்கியது.மேலும் தென்கொரியாவுடனான உறவை முழுவதுமாக முறித்து கொள்வதாகவும் வட கொரியா அறிவித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.

மீண்டும் தொடங்கியது தகவல் தொடர்பு

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஓர் ஆண்டுக்கு பிறகு வடகொரியா-தென்கொரியா இடையிலான தகவல் தொடர்பு நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த தகவலை தென்கொரியாவின் அதிபர் அலுவலகமான புளு ஹவுஸ்' தெரிவித்தது.

இதுகுறித்து புளு ஹவுஸ்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பலமுறை தனிப்பட்ட கடிதங்களை பரிமாறிக்கொண்டனர்.இதில் முதல் வேலையாக, துண்டிக்கப்பட்ட இரு நாடுகள் இடையிலான தகவல் தொடர்பு பாதையை மீட்டெடுக்க மூன் மற்றும் கிம் ஒப்புக்கொண்டனர். அதன்படி ஓர் ஆண்டுக்கு பிறகு இரு நாடுகள் இடையிலான தகவல்தொடர்பு நேற்று தொடங்கியது.

இரு தரப்பு உறவை மேம்படுத்த ஒப்புதல்

மேலும் இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், இருதரப்பு உறவை விரைவில் மேம்படுத்துவதற்கும் ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு மீண்டும் தொடங்கியதை வடகொரியாவும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. வெளியிட்ட செய்தியில் தகவல் தொடர்பு பாதையின் மறுசீரமைப்பு வடக்கு மற்றும் தெற்கு உறவுகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com