வடகொரியாவில் கொரோனா பலி அதிகரிப்பு: மேலும் 21 பேர் உயிரிழப்பு

ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வடகொரியாவில் கொரோனா பலி அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பியாங்யாங்,

வடகொரியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு பற்றி தகவல்கள் வெளிவந்தது இல்லை. ஆனால் இப்போது அங்கும் இந்த தொற்று ஆட்டம் போடத்தொடங்கி உள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த 12-ந் தேதி அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளார். அந்த நாட்டில் இதுவரை ஒருவர்கூட தடுப்பூசி போடவில்லை. கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசிதான் என்கிற நிலையில் அங்கு யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததாலும், சிகிச்சை வசதிகள் இல்லாததாலும் மரண பீதி நிலவும் சூழல் உருவாகி வருகிறது.

அந்த வகையில் கொரோனா தொற்று பலி அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே 6 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மேலும் 21 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் ஒருவரது இறப்பை மட்டுமே அரசு உறுதி செய்துள்ளது.

மேலும் கடந்த ஏப்ரல் கடைசியில் இருந்து காய்ச்சல் வேகமாக பரவி வருகிற நிலையில், இந்த பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 440 ஆக உள்ளது.

இதுவரை அங்கு 2 லட்சத்து 43 ஆயிரத்து 630 பேர் குணம் அடைந்துள்ளனர். 2 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் எத்தனை பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், தொற்றால் இறந்துள்ளனர் என அரசு ஊடகம் எதுவும் அறிவிக்கவில்லை.

இதற்கிடையே ஆளும் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் நாடு தனது அவசர கால இருப்புகளில் இருந்து விடுவித்துள்ள மருத்துவப் பொருட்களை விரைவாக வினியோகிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மற்ற நாடுகளில் கொரோனாவை எப்படி வெற்றிகரமாக கையாண்டார்கள் என்பதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, சீனாவில் இருந்து உதாரணம் எடுத்துக்கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

வட கொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அது பேரழிவுகளை ஏற்படுத்தி விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வடகொரியாவுக்கு தடுப்பூசிகளையும், மருந்துகளையும் அனுப்பி வைப்பதற்கு புதிய அதிபர் யூன் சுக் யோல் தலைமையிலான புதிய அரசு முன் வந்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக வட கொரியா எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான அணு ஆயுத தவிர்ப்பு பேச்சு வார்த்தை முடங்கியதைத் தொடர்ந்து, இரு கொரியாகளுக்கு இடையே நல்லிணக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சீனாவும் தனது நட்பு நாடான வட கொரியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. ஆனாலும் இதற்கான வேண்டுகோள் வடகொரியா தரப்பில் இருந்து பெறப்படவில்லை என்று சீனாவும் கூறுகிறது.

வட கொரியாவில் என்ன நடக்கப்போகிறது, கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்று உலகமே ஆவலுடன் எதிர்நோக்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com