வடகொரியாவில் 8 பேர் கொரோனாவுக்கு பலி: 18 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு..!!

மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு இல்லாத வடகொரியாவில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகினர். 18 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பியாங்யாங்,

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளால் உலகையே அதிர வைத்த நிலை போய், இப்போது அந்த நாடு கொரோனா அலையால் அதிர்ந்து போய் இருக்கிறது.

இரண்டரை கோடி மக்கள் தொகையை கொண்ட அந்த நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பது உலக அரங்கை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

அங்கு இதுவரை கொரோனா தொற்று, 18 ஆயிரம் பேரை பாதித்து இருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. தொற்று பரவல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு, பொதுமுடக்கம் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே வறுமையின் கோரப்பிடியில் தவிக்கும் அந்த நாடு பொதுமுடக்கத்தை சந்திக்கிறபோது, அதன் விளைவுகள் என்னாகுமோ என்ற கவலையும் சேர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் அங்கு 8 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 87 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வடகொரியா அரசு ஊடகம் கூறி உள்ளது.

அந்த நாட்டில் கொரோனா தொற்று ஏற்கனவே இருந்தது, இப்போதுதான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். இதுபற்றி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஒமைக்ரான் மாறுபாடு, தலைநகர் பியாங்யாங்கில் வெடித்துள்ளது. ஊரடங்கு, பொது முடக்க கட்டுப்பாடுகள் அமலில் வந்துள்ளன என தெரிவித்தனர்.

ஆனால் தலைநகருக்கு அப்பாலும் தொற்று வெடித்துள்ளது என்று அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. கூறி உள்ளது.

3.5 லட்சம் பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது என கூறிய அந்த செய்தி நிறுவனம், எத்தனை பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்பதை தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்பு சர்வதேச சமூகம், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியையும், சீன தடுப்பூசியையும் லட்சக்கணக்கில் தர முன் வந்தபோது அதை வடகொரியா மறுத்தது. இப்போது தடுப்பூசிகளை அந்த நாடு விரும்புவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இப்போது பொது வெளியில் முக கவசம் அணிந்துதான் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com