ரசாயன ஆயுதங்களை தயாரிக்க சிரியாவிற்கு உதவி என்ற ஐ.நா.வின் குற்றச்சாட்டிற்கு வடகொரியா மறுப்பு

ரசாயன ஆயுதங்களை தயாரிக்க சிரியாவிற்கு உதவுகிறது என்ற ஐ.நா.வின் குற்றச்சாட்டிற்கு வடகொரியா மறுப்பு தெரிவித்து உள்ளது. #SyriaCrisis #NorthKorea
ரசாயன ஆயுதங்களை தயாரிக்க சிரியாவிற்கு உதவி என்ற ஐ.நா.வின் குற்றச்சாட்டிற்கு வடகொரியா மறுப்பு
Published on

சியேல்,

சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக அரசு ஆதரவு படைகள் அவ்வபோது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறது. சிரியாவில் சர்வதேச நாடுகளின் கண்டனத்தை மீறி ரஷியாவின் உதவியுடன் அல் ஆசாத் அரசு அடாவடியான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சிரியாவில் கிழக்கு கூட்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லமுடியாத நிலை தொடர்கிறது.

இந்நிலையில் சிரியாவில் ரசாயன ஆயுதங்களை தயாரிக்க தேவையான உபகரணங்களை வடகொரியா அனுப்புகிறது என ஐ.நா.வின் அறிக்கை கூறியது.

2012 மற்றும் 2017 கால கட்டங்களில் வடகொரியாவில் இருந்து சிரியாவிற்கு ஆயுதம் தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விஷவாயு ஆயுதங்கள் தயாரிப்புக்கான கொள்கலன்கள், வால்வுகள் மற்றும் குழாய்கள் ஆகியவை அடங்கும் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான அறிக்கையானது இன்னும் வெளியிடப்படவில்லை. வடகொரியாவின் ஏவுகணை தயாரிப்பு நிபுணர்கள் சிரியாவின் ஆயுத தயாரிப்பு மையங்களில் காணப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிரிய படைகளால் குளோரின் பயன்படுத்தப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது, ஆனால் அந்நாட்டு அரசு அதனை மறுக்கிறது. இந்நிலையில் புதிய குற்றச்சாட்டு வெளியாகியது.

சிரிய ராணுவம் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் சென்றடைய முடியாத நிலையே நீடிக்கிறது. இதற்கிடையே கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என ரஷியா குற்றம் சாட்டுகிறது. சிரியாவில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவும் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

வடகொரியாவில் இருந்து கிடைக்கும் உதவிக்கு சிரியா சட்டவிரோதமாக நிதியை வழங்கி வருகிறது எனவும் நிபுணர்கள் குற்றம் சாட்டுகிறாகள் என பிபிசி செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் ரசாயன ஆயுதங்களை தயாரிக்க சிரியாவிற்கு உதவுகிறது என்ற ஐ.நா.வின் குற்றச்சாட்டிற்கு வடகொரியா மறுப்பு தெரிவித்து உள்ளது. வடகொரியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அமெரிக்காவால் உருவாக்கப்படும் செய்தியாகும் என வடகொரியா அரசு மீடியாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடகொரியா சிரியாவிற்கு உதவி செய்கிறது என "முட்டாள்தனமான வாதத்தை" கொண்டு உள்ளது என வடகொரியாவின் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமெரிக்கா தன்மீதான தவறுகளை மறைக்க அடுத்தவர்கள் மீது பிரச்சனையை திருப்பி விடுகிறது. சிரியா மற்றும் ரஷ்யா உடன் எவ்வித ஆயுத ஒப்பந்தங்களும் வடகொரியா செய்து கொள்ள வில்லை என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. நாங்கள் ரசாயன ஆயுதங்களை நாங்கள் தயாரிப்பதும் கிடையாது, வைத்திருக்கவும் இல்லை, வடகொரியாவும் ரசாயன ஆயுதங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com