10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலை நோக்கி ஏவிய வடகொரியா - அதிகரிக்கும் பதற்றம்

திடீரென பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து அண்டை நாடுகளை வடகொரியா பதற வைத்துள்ளது.
10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலை நோக்கி ஏவிய வடகொரியா - அதிகரிக்கும் பதற்றம்
Published on

பியாங்யாங்,

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்' என்ற ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. இதனைத் தங்களுக்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, 'சோ ஹியோன்' என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து கடந்த 11-ம் தேதி குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகள் கடலில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ-வுடன் நேரில் பார்வையிட்டார்.

சோதனைக்குப் பிறகு பேசிய கிம் ஜாங் அன், “நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்துள்ளது" என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா - தென்கொரியா நடத்தி வரும் வருடாந்திர ராணுவ பயிற்சியை கண்டிக்கும் விதமாக, ஜப்பான் கடற்பகுதியை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா இன்று சோதனை செய்துள்ளது.

ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடல் மட்டத்தில் இந்த ஏவுகணை விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு நிலைமையை மதிப்பிடுவதற்கும் ஏதேனும் சேதம் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்கும் ஐப்பான் பிரதமரின் நெருக்கடி மேலாண்மை மையம், அவசரகால பதிலளிப்பு குழுவை அமைத்துள்ளது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com