அணு உலையை மீண்டும் இயக்க‌ தொடங்கிய வடகொரியா!

அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக வடகொரியா மீண்டும் அணு உலையை இயக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது அமெரிக்காவுக்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது.
அணு உலையை மீண்டும் இயக்க‌ தொடங்கிய வடகொரியா!
Published on

சியோல்,

கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவித உடன்பாடும் எட்டாமல் தோல்வியில் முடிந்தன. மீண்டும் இந்த பேச்சுவார்த்தையை தொடங்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வரும் நிலையில் வடகொரியா அதனை தட்டிக்கழித்து வருகிறது.

இந்த நிலையில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக வடகொரிய மீண்டும் அணு உலையை இயக்க தொடங்கியுள்ளது ஐ.நா. சபையின் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. தலைநகர் பியாங்யாங்கின் வடக்கு பகுதியில் யங்பியன் நகரில் உள்ள அந்த அணு உலையில் அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளூட்டோனியம் தயாரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

சர்வதேச அணுசக்தி முகமையின் உறுப்பினராக இருந்த வட கொரிய அரசு 2009-ம் ஆண்டு நீக்கப்பட்டது. எனினும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வடகொரிய அணு உலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்த அணு உலையில் இருந்து குளிர்ந்த நீர் வெளியேற்றப்படுவது அந்த அணு உலை இயக்கப்படுவதைக் காட்டுவதாக சர்வதேச அணுசக்தி முகமை தனது ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

5 மெகாவாட் திறனுடைய உலைகளை கொண்டுள்ள யங்பியன் அணுசக்தி வளாகம் வடகொரிய அணு ஆயுத திட்டத்தின் மையமாக உள்ளது. அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் மையமாக இந்த யங்பியன் அணு உலை இருந்தது.

வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்பட்டால் இந்த அணு உலை கலைக்கப்படும் என்ற கிம்மின் கோரிக்கையை டிரம்ப் மறுத்துவிட்டார் என்றும், அப்போது செய்திகள் வெளியாகின. இந்த அணு உலை மற்றும் ஆய்வகத்தின் மேம்பாடு ஆழமான பிரச்சினைகளை உண்டாக்கக்கூடியது என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக உள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

தங்களது அணு ஆயுத கையிருப்பு மேலும் அதிகமாக்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதத்தில் கிம் ஜாங் அன் உறுதியளித்திருந்தார்.

மிகப்பெரிய அளவிலான ஹைட்ரஜன் குண்டை உருவாக்க தங்களது அறிவியலாளர்கள் பணியாற்றுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் வடகொரியா அரசு இந்த திட்டங்களை தொடங்குவதற்கு பதிலாக மோசமடைந்து வரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தது.

இந்த சூழலில் திடீர் திருப்பமாக வடகொரியா அணு சக்தி நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருப்பது உலக அளவில் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவே தாங்கள் விரும்புவதாக கூறிவரும் அமெரிக்க அரசுக்கு இது ஒரு புதிய தலைவலியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com