

பியாங்யாங்,
ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளில் இருந்து சிறுவர்களைக் கடத்திச் சென்று பயிற்சி அளிப்பதாகக் கூறி, வடகொரியாவின் வோன்சான் நகரில் உள்ள 'சோங்டோவோன்' சர்வதேச சிறுவர் முகாம் மீது சுவிட்சர்லாந்து அண்மையில் பொருளாதாரத் தடை விதித்தது.
இந்த நடவடிக்கைக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சுவிட்சர்லாந்து தூதரகத்தை மூடப் போவதாகவும் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பியாங்யாங்கில் கடந்த மாதம் புதிதாகத் திறக்கப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தின் தலைவர் ஆஸ்டியர் சில்வெய்னை வடகொரிய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. மேலும், அவரை 'விரும்பத்தகாத நபராக' அறிவித்த வடகொரியா, அந்த அலுவலகத்தை உடனடியாக மூடவும், அவர் 2 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறவும் நேற்று உத்தரவிட்டது.