எங்களுக்கும் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது வடகொரியா மறுப்பு

எங்களுக்கும் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது என வடகொரியா மறுப்பு தெரிவித்து உள்ளது.
எங்களுக்கும் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது வடகொரியா மறுப்பு
Published on

சியோல்,

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை (கருவிகளை) கொண்டு, இந்தியா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ஊடுருவி வான்னா கிரை என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் பரவுவதாகக் கூறப்படும் இந்த வைரஸ், உலகமெங்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளது.

இந்த வைரஸ்சின் புதிய பதிப்புகளைக் கொண்டு ஹேக்கர்கள் (சட்டவிரோதமாக கணினிகளில் ஊடுருவுகிறவர்கள்) தாக்குதல்கள் நடத்தாமல் தடுக்க உலகளாவிய அதிகார வர்க்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில், வான்னா கிரை வைரஸ் தாக்குதலில் வடகொரியாவுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரத்தை இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வான்னா கிரை வைரஸ்சின் முதல் பதிப்பின் சில குறியீடுகள், வடகொரியாவின் லாசரஸ் குரூப் புரோகிராம்களில் காணப்பட்டதாக சிமான்டெக் மற்றும் காஸ்பர்ஸ்கை இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்டறிந்தன. இதேபோன்று தென்கொரியாவின் ஹாரி லேப்ஸ் நிறுவனமும் கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் சைமன் சோய் இதுபற்றி குறிப்பிடுகையில், இது (வான்னா கிரை வைரஸ்), வடகொரியாவின் தீங்கு இழைக்கும் குறியீடுகளைப்போன்றே உள்ளது என கூறி உள்ளார்.

இதற்கிடையே இணைய தாக்குதலில் வடகொரியாவின் கைவரிசையை கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிற இந்திய தொழில் நுட்ப வல்லுனர் நீல் மேத்தா உறுதி செய்தார். தற்போதைய வான்னா கிரை வைரஸ் தாக்குதலில் வடகொரியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை என அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகளும் கூறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு லாசரஸ் குரூப் எனப்படும் பிரபல சைபர் கிரைம் குழு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களையும், 2016 ஆம் வங்காளதேசத்தை சேர்ந்த வங்கிகளின் கணினிகளையும் ஹேக் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக தென்கொரியாவுக்கு எதிராக தொடர்ந்து இயங்கிவரும் இந்த சைபர் கிரைம் குழு, வடகொரியாவால் உருவாக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. லாசரஸ் குரூப் உருவாக்கிய வைரஸ்களின் தரவுகளும் தற்போது பரவிவரும் ரான்சம்வேர் வைரஸின் தரவுகளும் ஒன்று போலவே இருப்பதாக கணினி வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை வடகொரியா திட்டவட்டமாக மறுத்து உள்ளது. உலகில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் வடகொரியாவை இழுத்து விடுவது கேலிக்குறியதாக உள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் கிம் இன் யோன் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com