“அந்தமான் தீவில் அமெரிக்கரின் உடலை தேடுவது ஆபத்தானது” பழங்குடியினரின் உரிமைக்காக போராடிவரும் அமைப்பு எச்சரிக்கை

அந்தமான் தீவில் கொல்லப்பட்ட அமெரிக்கரின் உடல் அங்கேதான் இருக்கவேண்டும் என்று பழங்குடியினரின் உரிமைக்காக போராடிவரும் அமைப்பு கூறியுள்ளது.
“அந்தமான் தீவில் அமெரிக்கரின் உடலை தேடுவது ஆபத்தானது” பழங்குடியினரின் உரிமைக்காக போராடிவரும் அமைப்பு எச்சரிக்கை
Published on

பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிவரும் சர்வைவல் இன்டர்நேஷனல் தொண்டு நிறுவனம், அந்தமானின் நார்த் சென்டினல் தீவில் கொல்லப்பட்ட அமெரிக்கரின் உடலை தேடும் முயற்சியை கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த சர்வைவல் இன்டர்நேஷனல் தொண்டுநிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீபன் காரே பேசுகையில், நார்த் சென்டினல் தீவில் கொல்லப்பட்ட அமெரிக்கரின் உடலை தேடும், மீட்கும் முயற்சியானது இந்திய அதிகாரிகள் மற்றும் பழங்குடியினருக்கும் மிகவும் ஆபத்தானதாக அமையும். வெளியுலக மக்களின் மூலம் நோய் தொற்று ஏற்பட்டால் பழங்குடியினர் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுவார்கள், என்று கூறியுள்ளார்.

வெளியுலகை சேர்ந்தவர்கள் அங்கு செல்கையில் காய்ச்சல், தட்டம்மை மற்றும் பிறநோய்கள் அவர்களை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற தொடர்பை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடந்த காலங்களிலும் இதுபோன்று சென்டினல் பழங்குடிகளை சிலர் அணுக முயற்சித்தனர். அவர்கள் தங்களுடைய பகுதியை காப்பாற்றிக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர். பழங்குடியினரால் கொல்லப்பட்ட அமெரிக்கரின் உடலை தீவிலேயே விட்டுவிடுங்கள். பழங்குடியினரை தனியாக விட்டுவிடுங்கள். பாதுகாக்கப்பட்ட பழங்குடியினர் வாழும் பகுதியை அணுகுவதற்கு இருக்கும் தடையை மேலும் வலுப்படுத்த வேண்டும். சென்டினல் தீவு மட்டுமல்லாமல் அந்தமானில் உள்ள பல்வேறுபட்ட தீவுகளிலும் மக்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்டீபன் காரே.

பழங்குடியினரால் கொல்லப்பட்ட அமெரிக்கர் ஜான் ஆலன் காவ் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை நோக்கி செல்வதே ஆபத்தானதாகும் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்கரின் உடலை மீட்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உடலை மீட்க போலீஸ் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. பழங்குடியினர் வில், அம்புவுடன் குறிபார்த்த நிலையில் போலீசார் படகுடன் கரை திரும்பினர். மானுடவியலாளர்கள் உதவியுடன் அவர்களை புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கரின் சடலத்தை மீட்பது என்பது எளிதான காரியம் கிடையாது, பாதுகாக்கப்பட்ட பழங்குடியினருக்கு எதிராக எந்தஒரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது எனவும் மானுடவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com