"எரிபொருள் விலையை உயர்த்தப் போவதில்லை" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

எரிபொருள் விலையை உயர்த்தப் போவதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம் AFP
கோப்புப் படம் AFP
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், மக்கள் கொந்தளிப்பார்கள் என கருதி, முந்தைய இம்ரான்கான் அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது.

கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசம் அடிப்படையில், டீசல் லிட்டருக்கு ரூ.41-ம், பெட்ரோலுக்கு ரூ.24-ம் மானியமாக கொடுத்து வந்தது. அதனால், தற்போது டீசல் விலை ரூ.144 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.149 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் அரசு, இந்த மானியம் வழங்குவதை நிறுத்தினால், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.51 உயர்த்தி, ரூ.195 ஆகவும் பெட்ரோல் விலையை ரூ.22 உயர்த்தி, ரூ.171 ஆகவும் விற்க வேண்டி இருக்கும் என்று எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை உயர்த்தப்போவதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டால் எரிபொருள் விலை அதிவிரைவாக உயரும் என்பதால் எரிபொருள் மற்றும் மின்சார மானியங்களை திரும்பப் பெறப்போவதில்லை என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com