

கொழும்பு,
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க வழி தெரியாத ராஜபக்சே சகோதரர்கள் அரசில் இருந்து விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் கொழும்புவில் அதிபரின் செயலகத்துக்கு எதிரே தன்னெழுச்சியாக நடந்து வரும் போராட்டம் நேற்று 17-வது நாளை எட்டியது.
இதைப்போல அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கி உள்ளன.
ஆனால் பதவி விலகும் கோரிக்கையை நிராகரித்து வரும் ராஜபக்சே சகோதரர்கள், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சர்வதேச நாடுகள் மற்றும் உலக வங்கி போன்றவற்றின் உதவியை நாடி வருகின்றனர்.
எனவே இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வந்த தலைவர்கள், தற்போது அதற்கான ஆதரவை திரட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து முன்னாள் எரிசக்தி துறை மந்திரி உதய கம்மன்பில நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசில் இருந்து வெளியேறிய எம்.பி.க்கள் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி.), மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றியடையச்செய்வதற்கு தேவையான 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் வரை எஸ்.ஜே.பி. கட்சியை காத்திருக்குமாறு கூறியதாக தெரிவித்த கம்மன்பில, தற்போது தங்களுக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக எம்.பி.க்களின் ஆதரவுகளை பெற்று வந்த எஸ்.ஜே.பி. கட்சி, போதுமான ஆதரவு கிடைக்காததால் அதை கிடப்பில் போட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் புத்த மத தலைவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம் எழுதியுள்ளார். அதில், மத தலைவர்களின் அறிவுரையை தான் மதிப்பதாகவும், அதேநேரத்தில் அரசு அமைப்பில் ஏதாவது மாற்றம் கொண்டு வர விரும்பினால் அது அரசியல் சாசன வழிமுறைகளின் படி மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க ராஜபக்சே ஒப்புக்கொண்டதாக புத்த மதத்தலைவர்கள் கூறியிருந்த நிலையில், இந்த கடிதத்தில் அது குறித்து நேரடியாக எந்த குறிப்பையும் ராஜபக்சே எழுதவில்லை.
அதேநேரம் ஒற்றுமை அரசை அமைக்க எதிர்க்கட்சிகள் முன்வராத நிலையில், இலங்கையில் இளம் எம்.பி.க்களை கொண்ட மந்திரிசபை அமைத்திருப்பதாக கூறியுள்ளார்.