

சென்னை,
சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்.) என்பது பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் ஒரு மிகப்பெரிய விண்வெளி ஆய்வகமாகும். மணிக்கு சுமார் 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த சர்வதேச விண் வெளி நிலையம், சுமார் 90 நிமிடங்களில் பூமியை ஒருமுறை சுற்றி வருகிறது. இந்த நிலையம், பார்வையாளருக்கும், சூரியனுக்கும் இடையில் நேரடியாக கடந்து செல்லும்போது, அது சூரியனின் வட்டில் சிறிய, வேகமாக நகரும் நிழல் போல் தோன்றும்.
இந்த நிகழ்வு குறிப்பிட்ட ஒரு குறுகிய புவியியல் பகுதியில் மட்டுமே காணப்படு கிறது. அதுவும் சில விநாடிகள் மட்டுமே நீடிக்கும். அந்தவகையில் சென்னையில் பாலவாக்கம் கடற்கரை பகுதியில் நேற்று காலை 7.27 மணிக்கு சர்வதேச விண் வெளி நிலையம் சூரியனுக்கு குறுக்கே கடந்து செல்லும் அரிய நிகழ்வு வெற்றிகரமாக காணப்பட்டது.
இதனை மாணவர்கள், பொதுமக்கள் பலர் கண்டு பரவசம் அடைந்தனர். பிர்லா கோளரங்கம் சார்பில், முறையான சோலார் பில்டர் பொருத் தப்பட்ட சிறப்பு உபகரணங்கள் மூலம் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்கம் உதவி இயக்குனர் அகிலன் கூறும் போது, 'இந்த நிகழ்வு சுமார் 1.38 விநாடிகள் அதாவது 2 நிமிடங்களுக்கும் குறை வாகத்தான் தெரிந்தது' என்றார்.