

ஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும் கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும். இல்லையெனில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்தார்.
மேலும், அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்' என்று ஈரான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார். இது தொடர்பாக, ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே ஓமன் நாட்டின் முயற்சியால் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இன்னொரு பக்கம் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படை பலத்தை அதிகரித்து வைத்து இருந்தது. இந்நிலையில் இன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர், ஈரான் மீது தாக்குதலை தொடங்கினர். தலைநகர் தெஹ்ரான் மற்றும் ஜோம்ஹாரி பகுதிகளில் அடுத்தடுத்து பல ஏவுகணைகள், குண்டுகள் வந்து விழுந்தன.
ஈரான் உச்ச தலைவர் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து இந்த தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் முக்கிய உளவுத்துறை அலுவலகங்கள் உட்பட 30 இடங்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பேசியுள்ள டிரம்ப், ஈரானுக்கு அணு ஆயுதங்கள் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம். ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும். போர் நடக்கும் போது நல்லது கெட்டது இரண்டும் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.