

பாரிஸ்,
ஐரோப்பிய கண்டம் முழுவதும் இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத அளவு உயர் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 1991 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பதிவான சராசரி வெப்பநிலையை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகம் என கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தெற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் அக்டோபர் மாதத்தில் வறட்சியடைந்து காணப்பட்டன. அதே சமயம் மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் ஈரப்பதம் மிக்கதாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐ.நா. உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புவி வெப்பமடைதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2015 முதல் 2020-ம் ஆண்டு வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வேகமான புவி வெப்பமடைதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரிக்கலாம் எனவும், கடுமையான மழை மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் எகிப்தில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் 27-வது மாநாட்டில், பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே ஒரு வரலாற்று உடன்படிக்கை ஏற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.