

நைஜர்,
நைஜீரியாவின் பாயல்சா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா ஆற்றுப்படுகையில் தனியார் கச்சா எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இந்த எண்ணெய் கிணற்றின் மேல் பகுதியில் இருக்கும் பம்புகளில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எண்ணெய் கசிவு ஏற்பட்டு வந்தது.
கிணற்றில் இருந்து வெளியேறிய எண்ணெய் சிறு ஆறுகள் வழியாக வளம் மிக்க நைஜர் டெல்டாவின் விளை நிலங்களை பாழாக்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அரசையும், ஆயில் நிறுவனத்தையும் கண்டித்து அங்கு பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எண்ணெய் கிணற்றில் ஏற்பட்டு வந்த கசிவு தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பெட்ரோலிய துறை அமைச்சர் டிமிப்ரே சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக எண்ணெய் கிணற்றில் உள்ள பம்புகள் சீரமைக்கப்படும் எனவும், சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நைஜர் டெல்டா ஏற்கனவே பல ஆண்டுகளாக கச்சா எண்ணெய் கசிவுகளால் தவித்து வருகிறது. தற்போது சாண்டா பார்பரா பகுதியில் ஏற்பட்ட இந்த கசிவு விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மீன் வளத்தையும் பாதித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.