

ஜெனீவா,
உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமைக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்வதாகவும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவில் இந்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உச்சம் அடைந்து, தற்போது குறையத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை ஒரு நாளில் 27 ஆயிரம் பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது 15 ஆயிரத்து 424 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் உலக அளவில் ஓமிக்ரான் நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இங்கிலாந்து மற்றும் டென்மார்க்கில் அதிக எண்ணிக்கையிலான ஒமைக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இங்கிலாந்தில் நேற்று 15,000 ஓமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்தில் 60,508 பேருக்கும், டென்மார்க்கில் 26,362 பேருக்கும் ஓமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் நார்வே (3,871), கனடா (3,402), அமெரிக்கா (1,781) மற்றும் தென்னாப்பிரிக்கா (1444) ஆகியவை 1000 க்கும் மேற்பட்ட ஓமைக்ரான் பாதிப்புகளை உறுதி செய்துள்ளன.