ஒமைக்ரான் அச்சுறுத்தல்: இந்திய பயணிகளுக்கு கெடுபிடி காட்டும் ஜப்பான்..!

ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல்: இந்திய பயணிகளுக்கு கெடுபிடி காட்டும் ஜப்பான்..!
Published on

டோக்கியோ,

கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்திய மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்களுக்கு தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, கிரீஸ், ருமேனியா மற்றும் நான்கு அமெரிக்க மாநிலங்களில் இருந்து ஜப்பானுக்கு பயணம் செய்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை(இன்று) முதல் கடுமையான தனிமைப்படுத்துதல் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொலராடோ, ஹவாய், மினசோட்டா மற்றும் நியூயார்க்கிலிருந்து ஜப்பானுக்குச் செல்லும் ஜப்பானியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட இடங்களில் மூன்று நாட்கள் கட்டாயமாக தங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் அரசால் நியமிக்கப்பட்ட இடங்களில் மூன்று நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கான பட்டியலில் ஏற்கனவே ஆஸ்திரியா, ஈக்வடார் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. பலர் 10 நாட்களுக்கும் மேலாக கடுமையான தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com