

நியுயார்க்,
ஐ.நா. பொதுச்சபையின் 75-வது ஆண்டு கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்குகிறது. உயர்மட்ட பொது விவாதம், 22-ந் தேதி இருக்கும்.
இந்த கூட்டத்தில் முதல் முறையாக உலக தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.
இதையொட்டி நியுயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை தலைவர் முகமது பாண்டே நேற்று முன்தினம் கூறியதாவது:-
உலகத்தலைவர்கள் இந்த கூட்டத்துக்கு நியுயார்க் வர முடியாது. ஏனென்றால் அவர்கள் தனியாக வர இயலாது. ஒரு நாட்டின் தலைவர் தனியாக வர முடியாது. எனவே இங்கு உலக தலைவர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் தலைவர்கள் நேரில் பங்கேற்க வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில், பொதுவிவாதத்தை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை ஐ.நா.,உறுப்பு நாடுகளுடன் எங்கள் அலுவலகம் கலந்து பேசி வருகிறது. இந்த பொது விவாதம், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுடன் இணக்கமான வடிவத்தில் நடைபெறும்.
பொது விவாதத்தை பின்னர் மற்றொரு நாளுக்கு தள்ளிப்போடும் உத்தேசமும் இல்லை. நிச்சயிக்கப்பட்டபடி நடைபெறும். ஆனால் கடந்த 74 ஆண்டுகளில் நடந்தது போல இந்த முறை தலைவர்கள் நேரில் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
நாங்கள் இந்த விஷயம் பற்றி உரையாடல்கள் நடத்தி உள்ளோம். அடுத்த 2 வாரங்களில் இதற்கான வழிமுறைகள் தெளிவாகி விடும் என்று நம்புகிறேன்.
உயர்மட்ட விவாதத்தில் உலக தலைவர்கள் வருவது சாத்தியம் இல்லை என்று தோன்றினாலும்கூட, பொதுச்சபை மண்டபத்தில் 100 அல்லது அதற்கு மேற்பட்டவர்களை அனுமதிக்க முடியும் என்று அவர் கூறினார்.