

ஜகார்தா,
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், புறப்பட்ட 13- வது நிமிடத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், 178 பயணிகள், ஒரு குழந்தை, 2 பச்சிளங் குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 189 பேர் இருந்தனர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர்.
விமானத்தின் உடைந்த பாகங்கள் ஜாவா கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகொப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.
விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், ஒரு கருப்பு பெட்டி இன்று மீட்கப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதால், விமானத்தின் கடைசி நேர நிமிடங்களை அறிந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பின்னர் முழு விவரம் தெரிய வரும் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.