‘பேச்சுவார்த்தை மட்டுமே உலகத்தின் மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும்’ - போப் லியோ கிறிஸ்துமஸ் உரை

தனது கிறிஸ்துமஸ் உரையில் காசா மக்களை போப் லியோ நினைவுகூர்ந்தார்.
வாடிகன்,
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரோம் நகரத்தில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் போப் லியோ தலைமையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தனது முதல் கிறிஸ்துமஸ் உரையில் போப் லியோ கூறியதாவது;-
“பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்ததன் மூலம் கடவுள் சரீரமாக ஆனார். அப்படியிருக்கும்போது, வாரக்கணக்கில் மழை, காற்று மற்றும் குளிருக்கு ஆளாகியுள்ள காசாவில் உள்ள கூடாரங்களைப் பற்றியும், ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள எண்ணற்ற பிற அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களைப் பற்றியும், நமது சொந்த நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடற்ற மக்களின் தற்காலிக தங்குமிடங்களைப் பற்றியும் நாம் எப்படி நினைக்காமல் இருக்க முடியும்?
பல போர்களால் சோதிக்கப்பட்ட பாதுகாப்பற்ற நிலையில் வாழும் மக்களின் பலவீனத்தையும், ஆயுதம் ஏந்தும்படி கட்டாயப்படுத்தப்பட்ட இளைஞர்களையும், அவர்களை மரணத்திற்கு அனுப்பும் நபர்களின் ஆடம்பரமான பேச்சுகளில் நிறைந்திருக்கும் பொய்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பேச்சுவார்த்தை மட்டுமே உலகத்தின் மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும். தன்னிச்சையான பேச்சுகள் தடுக்கப்பட்டு, கவனிக்கும் தன்மையை மேம்படுத்தி, மற்றவர்களின் மனிதநேயத்தின் முன் நாம் மண்டியிடும்போதுதான் அமைதி நிலவும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






