‘ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடுங்கள்... முட்டாள்களே...’ - டிரம்ப் புலம்பல்

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
‘ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடுங்கள்... முட்டாள்களே...’ - டிரம்ப் புலம்பல்
Published on

வாஷிங்டன்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியாத ஈரான், வளைகுடா நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செவ்வாய்க்கிழமை ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளது. இது மோசமான தாக்குதலாக இருக்கும். ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடுங்கள்... முட்டாள்களே... இல்லாவிட்டால் நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com