ஆபரேசன் சாகர்பந்து... இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பறந்த 12 டன் நிவாரண பொருட்கள்

கூடாரங்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
ஆபரேசன் சாகர்பந்து... இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பறந்த 12 டன் நிவாரண பொருட்கள்
Published on

கொழும்பு,

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் டிட்வா சூறாவளி புயலால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் சேர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. கனமழை தொடர்பான பாதிப்புகளில் சிக்கி இதுவரை 69 பேர் பலியாகி உள்ளனர். 34 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று, கனமழை தொடர்ச்சியாக 63 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2.19 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டன. 666 வீடுகள் பகுதியளவாக சேதமடைந்து உள்ளன. பொதுமக்கள் அவசர உதவிக்கு 117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகளை முடுக்கி விடும்படியும் மற்றும் தடையில்லா நிவாரண உதவி கிடைக்கவும் வழி செய்திடும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகே உத்தரவிட்டு உள்ளார். மீட்பு பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், முன்வந்துள்ளது. டிட்வா புயலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.

இலங்கையில், பேரிடரை முன்னிட்டு, இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்குகிறது. இதுபற்றி மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் கொழும்பு நகரில் நிவாரண உதவி பொருட்களை வழங்கி வருகின்றன. தொடர்ந்து நிவாரண உதவிக்கான பணிகள் நடந்து வருகின்றன என பதிவிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, இந்திய விமான படையின் சி-130 ஜே விமானத்தில் இன்று காலை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில், கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு பொருட்கள் உள்ளிட்ட 12 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதனை மத்திய மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் பதிவில் பகிர்ந்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com