பாகிஸ்தானில் இந்து கோவிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கட்டுமான பணி நிறுத்தம்

பாகிஸ்தானின் தலைநகரில் சகிப்பு தன்மையை அடையாளப்படுத்தும் விதத்தில் அறிவிக்கப்பட்ட முதல் இந்து கோவிலின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
பாகிஸ்தானில் இந்து கோவிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கட்டுமான பணி நிறுத்தம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசில் கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் முஸ்லிம் போராட்டக்காரர்கள் உடனடியாக, ஒதுக்கப்பட்ட நில பகுதியில் முகாமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து கட்டமைப்பு ஒன்று நாட்டின் தலைநகரில் அமைய கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், அடுத்து வந்த பிரதமர் இம்ரான் கானின் அரசில் இந்த கோவில் அமைவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கடந்த மாதத்தில் முதல் அடிக்கல் நாட்டப்பட்டது. பாகிஸ்தானின் ஒரு புதிய மற்றும் சகிப்பு தன்மை சகாப்தத்தின் அடையாளம் ஆக இது அமைந்துள்ளது என அரசு அதிகாரிகள் அறிவித்தனர்.

சில நாட்களுக்கு பின்னர் கோவில் கட்டுமான பணிக்காக 13 லட்சம் டாலர் ஒதுக்க அரசுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டார். இந்த நிதி ஒதுக்கீடானது, மொத்த தொகையில் 5ல் ஒரு பங்கு ஆகும்.

இதுபற்றி இம்ரானின் கட்சியை சேர்ந்த இந்து நாடாளுமன்றவாதியான லால் சந்த் மாலி கூறும்பொழுது, கோவில் எழுப்புவதற்காக நாங்கள் நிலம் தோண்டும்பொழுது, வெளியுலகுக்கு பாகிஸ்தான் பற்றிய நல்ல தோற்றம் ஒன்றை இந்த கோவில் வழங்கும். நான் முழு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என பிரதமர் கூறினார். நாட்டின் தலைநகரில் அமையும் ஓர் இந்து கோவில் ஆனது, அனைத்து மதத்திற்கும் பாகிஸ்தான் இடமளிக்கும் என உலகுக்கு எடுத்து காட்ட போகிறது என்றும் பிரதமர் கூறினார் என்று லால் கூறியுள்ளார்.

இந்த சூழலில், முஸ்லிம் மதசாமியார்கள் மீண்டும் இதில் மூக்கை நுழைத்தனர். இதனால் கோவில் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்து கோவில் எதுவும் கட்டப்பட கூடாது. ஏனெனில் பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என முஸ்லிம் மதசாமியார்கள் பலர் முழங்கினர்.

கோவிலுக்கான நிதியை தங்களது வரி பணத்தில் இருந்து ஒதுக்குவதற்கு குடிமக்களும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு ஊடக நிறுவனங்களும் வெளிப்படையாக பிரசாரம் மேற்கொண்டன.

தொடர்ந்து அதிகரித்த அழுத்தத்தினால், அரசு அளித்த வாக்குறுதியான, கோவில் கட்டுமானத்திற்கான நன்கொடை தொகையை வழங்குவதில் இருந்து பின்வாங்கியது. இதனால், காலி நிலத்தில் கோவிலை சுற்றி எழுப்பிய சுவருடன் கட்டுமான பணியை அரசு நிறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com