

ஹாங்காங்,
ஹாங்காங், இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்தது. கடந்த 1997-ம் ஆண்டு, ஹாங்காங்கை சீனாவிடம் இங்கிலாந்து ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரத்துடன் ஹாங்காங் இயங்கி வருகிறது.
ஆனால் ஹாங்காங்கின் தன்னாட்சியை வேட்டு வைக்கிற வகையில், சீனா தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை அங்கு கொண்டு வந்தது. இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சீன தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் அங்கு போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இது சீனாவுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது.
இந்த சட்டத்தை தீவிரமாக எதிர்த்து, போர்க்கொடி உயர்த்தி வந்த ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், சீன நிர்வாகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் டென்னிஸ் கவாக், ஆல்வின் யியுங் நொக் கியு, கென்னத் லியுங், குவோக் கா கி ஆவார்கள். இவர்கள் 4 பேரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனா கூறுகிறது.
இவர்களை பதவியை விட்டு நீக்குவதற்கு முன்பாக, ஹாங்காங் விடுதலைக்கு குரல் கொடுக்கிறவர்களை பதவி நீக்கம் செய்யலாம் என சீன நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டது குறித்து ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் கருத்து தெரிவிக்கையில், சட்டப்படியான தேவையை நிறைவேற்றாத சட்டசபை உறுப்பினர்கள், பதவியில் தொடர்வதை அனுமதிக்க முடியாது என கூறினார்.
அதே நேரத்தில் அந்த 4 பேரும் எந்த வகையில் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டார்கள் என்பதற்கு சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. சீனாவின் இந்த செயல், ஹாங்காங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் அடாவடியை கண்டித்து எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் 15 பேரும் நேற்று முன்தினம் கூண்டோடு பதவி விலகினர்.
எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு பதவி விலகி இருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது கேலிக்கூத்து, சீனாவின் அதிகாரத்துக்கு வெளிப்படையான சவால் என சீனா கூறி உள்ளது. மேலும், இந்த சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமாவை தீவிர எதிர்ப்பை தூண்டி விடுவதற்கும், வெளிநாட்டு தலையீட்டை கோருவதற்கும் பயன்படுத்தினால், அது தப்புக்கணக்காக அமையும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.