30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்: இந்தியர்கள் மட்டும் இத்தனை பேரா..?

அதிகாலை 5-6 மணிக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் பணி நீக்க மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்: இந்தியர்கள் மட்டும் இத்தனை பேரா..?
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது. ஓபன் ஏஐ உள்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலை சந்தித்தது.

இந்நிலையில் பிரபலமான ஆரக்கிள் நிறுவனம் உலகம் முழுவதும் 30 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மிகப்பெரிய முதலீடுகள் மற்றும் டேட்டா சென்டர் கட்டுமானத் திட்டங்களுக்காக அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதால், நிறுவனத்தின் செலவினங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆட்குறைப்பு, இந்தியா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இணையத்தில் பரவி வரும் தகவல்களின்படி, இந்தியாவில் உள்ள சுமார் 30 ஆயிரம் பணியாளர்களில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில், பணிநீக்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 ஆயிரமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது ஆரக்கிள் நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் ஏறத்தாழ 18 சதவீதமாகும். இதுதொடர்பாக ஆரக்கிள் நிறுவனம், அதிகாலை 5-6 மணிக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

பணிநீக்கம் குறித்து ஆரக்கிள் தரப்பில், “ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், சில வேலைகள் எதிர்காலத்தில் தேவையற்றதாக மாறக்கூடும் என்பதால் அந்த துறைகளில் பணியாளர் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் காரணமாக, செயல்பாடுகளைச் சீரமைக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தின் இந்த பணிநீக்க அறிவிப்பு உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஏஐ முதலீடுகளுக்காக இதே போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com