ரஷியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம்; மரியுபோல் ஆலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உக்ரைன் வீரர்கள் வெளியேற்றம்!

மரியுபோலின் அசோவ்ஸ்டலில் இருந்து 260க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Image Credit: Reuters
Image Credit: Reuters
Published on

கீவ்,

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அஸவ்ஸ்டால் ஸ்டீல் ஆலையில் இரு மாதங்களுக்கு மேல் சிக்கியிருந்த உக்ரைன் படையினர் அங்கிருந்து மனிதநேய வழித்தடம் மூலமாக வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷிய படைகள் தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்த நிலையில், அந்த நகரின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மட்டும் உக்ரைனிய பாதுகாப்பு வீரர்கள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்துவதால் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்படாமல் உள்ளது.

அந்த வகையில் இரும்பு ஆலையில் ரஷ்ய வீரர்களுக்கு எதிராக பல வாரங்களாக போராடி வரும் உக்ரைன் பாதுகாப்பு வீரர்களில் பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, 11 சதுர பரப்பளவு கொண்ட அஸவ்ஸ்டால் ஆலையில், காயமடைந்த வீரர்களை வெளியேற்ற இருநாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் உருவாகியிருப்பதாக ரஷியா முன்னதாக தெரிவித்திருந்தது. அதன்படி, உக்ரைனால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் ரஷிய வீரர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில், அங்கு படுகாயமடைந்த நிலையில் இருந்த 53 உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த நோவாசோவ்ஸ்க் நகருக்குக் அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு துறை துணை மந்திரி ஹன்னா மாலியார் தெரிவித்தார். மேலும், 211 வீரர்கள், கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த ஒலெனிவ்கா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

டஜன் கணக்கிலான பேருந்துகள் மூலம் உக்ரைன் படையினர் அந்த ஆலையிலிருந்து திங்கள்கிழமை மாலை வெளியேற்றப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேபோல, உக்ரைன் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்படும் வீடியோக்களை ரஷிய அரசு ஊடகமும் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com