பிலிப்பைன்சை மிரட்டும் ‘ராய்’ புயல்..!

பிலிப்பைன்சை மிரட்டி வரும் ராய் புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
பிலிப்பைன்சை மிரட்டும் ‘ராய்’ புயல்..!
Published on

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டை நோக்கி ராய் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புயல் மிரட்டுகிறது. உள்நாட்டில் ஓடெட் என்று அழைக்கப்படுகிற இந்த புயல் காரணமாக சூரிகாவோ டெல் நோர்டே மாகாணத்துக்கு கிழக்கே 175 கி.மீ. தொலைவில், மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று விசியது. இது 230 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தினகட் தீவு பாதிப்புக்கு உள்ளாகும், அங்கு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளன. பொதுமக்கள் கடலோர பகுதிகளில் இருந்தும், தாழ்வான பகுதிகளில் இருந்தும், நிலச்சரிவு அபாய பகுதிகளில் இருந்தும், கடலலைகள் உயரமாக எழும்புகிற இடங்களில் இருந்தும் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் செல்லும் பாதையில் 10 ஆயிரம் கிராமங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆபத்தான இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கடல் பயணங்களை தடை செய்துள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்தது. புயல் மீட்பு பணிகளுக்காக கடலோர காவல் படையினரும், மீட்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் சூறாவளி காற்றினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்த பிலிப்பைன்சும் ஒன்று என்பது நினைவு கூரத்தக்கது. இங்கு 28 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com