முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக மலேசியாவில் ‘பத்மாவத்’ படத்துக்கு தணிக்கை குழு தடை விதிப்பு

மலேசியாவில் ‘பத்மாவத்’ படத்துக்கு அந்நாட்டு தணிக்கை வாரியம் தடை விதித்து உள்ளது. #Padmaavat #Malaysia
முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக மலேசியாவில் ‘பத்மாவத்’ படத்துக்கு தணிக்கை குழு தடை விதிப்பு
Published on

கோலாலம்பூர்,

14-ம் நூற்றாண்டில் சித்தூர் சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த ராணி பத்மாவதியை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் வரலாற்று திரைப்படம் தயாரானது.

இந்த படத்தில் ராணி பத்மாவதி பற்றியும், ராஜபுத்திர வம்சத்தினர் குறித்தும் அவதூறான காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்த நிலையில் இந்த படம் வியாழக்கிழமை நாடு முழுவதும் பத்மாவத் என்ற பெயரில் வெளியாகியது. படத்தின் மீது விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட நிலையில் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சர்ச்சைக்குரிய பத்மாவத் படத்தில் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் திரையிட பாகிஸ்தான் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது.

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியை எதிர்மறையாக சித்தரித்து உள்ளது காரணமாக பாகிஸ்தானில் காட்சி நீக்கத்தை எதிர்க்கொள்ளும் என அச்சம் நிலவியது. ஆனால் தணிக்கை வாரியம் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் படத்தை திரையிட அனுமதியை வழங்கி உள்ளது.

தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள பத்மாவத் படம் கடுமையான எதிர்ப்பை மீறி வெற்றிகரமாக ஓடுகிறது.

4 நாட்களில் வசூல் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில், பத்மாவத் படத்துக்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக மலேசியாவில் பத்மாவத் படத்துக்கு தணிக்கை குழு தடை விதித்து உள்ளது. பத்மாவத் திரைப்படம் முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மலேசியாவில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று மலேசிய தணிக்கை குழு தலைவர் முகமத் சாம்பிரி அப்துல் அஜீஸ் கூறிஉள்ளார். தடையை எதிர்த்து வினியோகஸ்தர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com