பாகிஸ்தானில் முஸ்லீம் செமினரியில் இருந்து தப்பியோட முயன்ற 8 வயது மாணவன் அடித்து கொலை

பாகிஸ்தானில் மத கல்வி அளிக்கும் பள்ளி கூடம் ஒன்றில் இருந்து தப்பியோட முயன்ற 8 வயது மாணவனை அடித்து கொன்ற மதகுரு கைது செய்யப்பட்டு உள்ளார். #Karachi
பாகிஸ்தானில் முஸ்லீம் செமினரியில் இருந்து தப்பியோட முயன்ற 8 வயது மாணவன் அடித்து கொலை
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பின் காசிம் என்ற பகுதியில் மத கல்வி அளிக்கும் பள்ளி கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படித்து வந்த 8 வயது மாணவன் முகமது உசைன் அங்கிருந்து தப்பி வெளியே சென்றுள்ளான். ஆனால் அவனது பெற்றோர் உசைனை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்து விட்டுள்ளனர். தப்ப முயன்றதற்காக சிறுவன் மீது ஆத்திரத்தில் இருந்த மதகுரு காரி நஜ்முதீன் தடி மற்றும் கம்பு கொண்டு அவனை அடித்து உள்ளார்.

கடுமையாக அடித்து கொடுமை செய்ததில் அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான். சிறுவனின் உடம்பில் கொடுமை செய்ததற்கான தழும்புகள் காணப்பட்டு உள்ளன. அவனது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு சிறுவனின் பெற்றோர் மறுத்து விட்டனர்.

நஜ்முதீனை கைது செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

தங்களது குழந்தைகளை பள்ளி கூடத்தில் சேர்த்து கல்வி வழங்க முடியாத ஏழை பெற்றோர் இதுபோன்ற கல்வி அளிக்கும் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமிய குழுக்களால் நடத்தப்படும் மதம் சார்ந்த கல்வி அளிக்கும் பள்ளிகள் நிறைந்து உள்ளன.

கடந்த காலங்களில், குழந்தைகளை தீவிரவாதத்திற்கு அனுப்பும் பயிற்சிகளை அளித்து வந்தவை என்ற சந்தேகத்திற்குள்ளான இதுபோன்ற சில பள்ளி கூடங்கள் மூடப்பட்டு உள்ளன.

செராப் கோத் என்ற பகுதியில் அமைந்த இதுபோன்ற பள்ளி கூடம் ஒன்றில் மாணவர்களை அறையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட காட்சிகளை தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பியது.

#Karachi #student

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com