

லாஹூர்,
பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த 25ந்தேதி தேர்தல் நடந்தது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்களும், 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
ஓட்டு பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தலை முன்னிட்டு அந்நாடு முழுவதும் 25ந்தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்தலில் வாக்கு பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக 4 லட்சத்து 49 ஆயிரத்து 465 போலீசாரும் மற்றும் 3 லட்சத்து 70 ஆயிரம் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன் பிரசாரம் மற்றும் பேரணியின்பொழுது முக்கிய தலைவர்களை இலக்காக கொண்டு நடந்த தாக்குதல்களில் 180 பேர் வரை பலியாகி இருந்தனர்.
இதனிடையே, அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் அதிக பரபரப்பிற்கிடையே நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்தது. அக்கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 64 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றன.
எனினும் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்தன என 2வது இடம் பிடித்துள்ள நவாஸ் ஷெரீப் தலைமையிலான கட்சி குற்றச்சாட்டு எழுப்பியது.
இந்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறும்பொழுது, நாடு முழுவதும் இருந்து தேர்தல் நாளில் நடந்த முறைகேடுகள் பற்றிய சான்றுகள் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றையும் வெளியிடுவோம் என கூறியுள்ளனர்.
தொடர்ந்து தேர்தல் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த நீதி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதேவேளையில், தேர்தல் முறைகேடுகள் பற்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் இன்று உறுதி அளித்துள்ளது. சிந்து மாகாண தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோரிடம், 5 காலியான வாக்கு பதிவு பெட்டிகள் மற்றும் கராச்சி மற்றும் சியால்கோட் நகரின் சாலை பகுதியில் கிடந்த 12க்கும் மேற்பட்ட ஓட்டு சீட்டுகள் ஆகியவை பற்றி விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளது.