

இஸ்லமாபாத்,
பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை முகமை வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கின் விசாரணையை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து , நவாஸ் ஷெரீப் அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒரு மனுவும், தங்கள் மீது எழுந்துள்ள லண்டனில் சொகுசு பங்களாக்கள் வாங்கிய குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றில் தொடர்புடைய வழக்குகளில் விசாரணை நடத்துமாறு தேசிய பொறுப்புடைமை முகமைக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரது மகன்கள் மற்றும் நிதி மந்திரி இஷாக் தார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு நவாஸ் ஷெரீப்புக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.