பாகிஸ்தானில் ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் கொரோனாவுக்கு பலி

பாகிஸ்தானில் ஆளுங்கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாகாண பெண் உறுப்பினர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.
பாகிஸ்தானில் ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் கொரோனாவுக்கு பலி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்நாட்டில் மற்ற நாடுகளை போல கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதுவரை 980க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். 45 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அக்கட்சியின் பஞ்சாப் மாகாண அவை உறுப்பினராக இருந்து வருபவர் ஷாஹீன் ரஜா (வயது 60). கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் லாகூரில் உள்ள மேயோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வார இறுதியில் அவருக்கு உடல்நலம் மோசமடைந்தது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. எனினும், வைரஸ் தொற்றுக்கு அவர் இன்று பலியாகி உள்ளார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற வியாதிகளும் இருந்துள்ளன. இதனால் அவரது நிலைமை மோசமடைந்து இருந்தது என அதிகாரிகள் கூறினர்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com