போலீஸ் அலுவலகத்தில் தாக்குதல் : பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கராச்சி போலீஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்கிய 5 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
போலீஸ் அலுவலகத்தில் தாக்குதல் : பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

கராச்சி,

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிற பாகிஸ்தான் உள்நாட்டில் அதே பயங்கரவாதத்துக்கு இரையாகி வருகிறது. அப்படியொரு சம்பவம்தான் அந்த நாட்டில் நேற்று முன்தினம் இரவில் அரங்கேறியது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில், முக்கிய சாலையாக விளங்குகிற ஷாஹ்ரா-இ-பைசல் சாலையில் நகர போலீஸ் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் சதார் போலீஸ் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.

இந்த கராச்சி போலீஸ் தலைமை அலுவலக வளாகத்தினுள் நேற்று முன்தினம் இரவில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர். உடனே அவர்கள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசினர்.

துப்பாக்கிசூட்டில் 4 பேர் பலி

அதைத் தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தின் 3-வது மற்றும் 4-வது மாடியினுள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தினர். எதிர்பாராத தாக்குதல் என்பதால் போலீசார் சுதாரிப்பதற்குள் அவர்கள் பலரையும் சுட்டு வீழ்த்தினர். பலர் ரத்தம் சொட்டச்சொட்ட தரையில் சரிந்து விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இந்த துப்பாக்கி சூட்டில் 2 போலீஸ்காரர்கள், துணை ராணுவப்படை வீரர் ஒருவர், பொதுமக்களில் ஒருவர் என 4 பேர் கொல்லப்பட்டனர்.

5 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை

உடனே போலீஸ் படையினரும், பாதுகாப்பு படையினரும் அங்கே முற்றுகையிட்டு, பயங்கரவாதிகளுடன் பலத்த துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இது சில மணி நேரம் நீடித்தது.

இந்த துப்பாக்கி சண்டையின் முடிவில் தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் போலீஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 2 பேர் தங்கள் உடலில் கட்டிவந்த குண்டுகளை வெடிக்க வைத்து பலியானதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலீபான்கள் பொறுப்பேற்பு

பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட பின்புதான் இரவு 10.50 மணிக்கு கராச்சி போலீஸ் தலைமை அலுவலகம், அவர்கள் பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து சிந்து மாகாண அரசின் செய்தி தொடர்பாளர் முர்டசா வாஹப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கராச்சி போலீஸ் அலுவலகம் விடுவிக்கப்பட்டு விட்டது" என கூறப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், " தாக்குதலில் 2 போலீசார், துணை ராணுவ படைவீரர் ஒருவர், சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதையொட்டி அவர்கள் விடுத்த அறிக்கையில், " கராச்சி போலீஸ் அலுவலகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தினோம்" என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் கடும் கண்டனம்

பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகள் நடத்தி உள்ள இந்த தாக்குதலுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை கச்சிதமாக எடுத்து முடித்த போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரை அவர் பாராட்டியும் உள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், " பயங்கரவாதிகள் மீண்டும் கராச்சியை குறி வைத்து தாக்கி உள்ளனர். இந்த கோழைத்தனமான தாக்குதல், போலீஸ் மற்றும் சட்ட அமலாக்கல் அமைப்புகளின் மன உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தி விடாது. போலீஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒட்டுமொத்த தேசமும் இணைந்து நிற்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com