கராச்சி தாக்குதலுக்கு அபாண்டமாக இந்தியா மீது பழி போட்ட பாகிஸ்தான்: வெளியுறவு அமைச்சகம் பதிலடி

கராச்சியில் சமீபத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாகிஸ்தானின் தகவல்களை நாங்கள் கவனித்துள்ளோம் என்று இந்தியா கூறியது.
கராச்சி தாக்குதலுக்கு அபாண்டமாக இந்தியா மீது பழி போட்ட பாகிஸ்தான்: வெளியுறவு அமைச்சகம் பதிலடி
Published on

பாகிஸ்தான் துணை ராணுவப் படையான சிந்து ரேஞ்சர்ஸ் பிரிவின் முகாம் கட்டிடம் கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜவுஹர் என்ற பகுதியில் உள்ளது. இந்த துணை ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று ராணுவ முகாம் கட்டிடத்தின் மீது வேகமாக மோதியது.

பின்னர் அந்த வாகனம் வெடித்துச் சிதறியது. அப்போது பயங்கரவாதிகள் ராணுவ கட்டிடத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் கையெறி குண்டுகளையும் வீசினர். இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். உடனே பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதலை நடத்தினர். இதில் அவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதியை உயிருடன் பிடித்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையே, பாகிஸ்தானின் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்தியாவின் பிராக்சி அமைப்புதான் காரணம் என்று பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்துள்ள இந்தியா, தங்கள் சொந்த மண்ணில் இருக்கும் பயங்கரவாத கட்டமைப்புகள் மீது நம்பகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

கராச்சியில் சமீபத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாகிஸ்தானின் தகவல்களை நாங்கள் கவனித்துள்ளோம். அந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது நாட்டுக்குள் செயல்பட்டு வரும் பயங்கரவாத கட்டமைப்புகள் மீது நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், அரசின் கொள்கைக்கான கருவியாக பயங்கரவாதத்தை பயன்படுத்தும் போக்கை கைவிட வேண்டும்" என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com