பாகிஸ்தானில் தேர்தல் வன்முறை தாக்குதலில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் உள்பட 3 பேர் பலி

பாகிஸ்தானில் தேர்தல் வன்முறை தொடர்கிறது. இஸ்லாமிய கட்சி தலைவரை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. மற்றொரு தாக்குதலில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் உள்பட 3 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் தேர்தல் வன்முறை தாக்குதலில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் உள்பட 3 பேர் பலி
Published on

பெஷாவர்,

பாகிஸ்தானில் நாளை மறுதினம் (புதன்கிழமை) நாடாளுமன்ற தேர்தலும், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் அஸ்பந்தியர் வாலி, அமீர் ஹைதர் ஹோட்டி, காமி வதான் கட்சி தலைவர் அப்தாப் ஷெர்பாவ், ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மகன் டால்ஹா சயீத் ஆகியோருடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஏற்கனவே தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

அதேபோன்று, கடந்த 13-ந் தேதி, இஸ்லாமிய கட்சியான ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் கட்சியின் தலைவர் அக்ரம் கான் துர்ரானியை குறிவைத்து சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது.

வடக்கு வாஜிரிஸ்தான் எல்லையில் அமைந்து உள்ள பான்னு என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தபோது நடந்த இந்த கொலை முயற்சியில் அவர் தப்பினார். ஆனால் வேறு 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அக்ரம் கான் துர்ரானியை கொல்வதற்கு நேற்றும் முயற்சி நடந்தது. பான்னு நகரில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது, அவரது வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

ஆனால் இந்த முயற்சியிலும் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கானை எதிர்த்து, என்.ஏ. 35 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை தேர்தலில் பிகே-99 தொகுதியில் போட்டியிடும் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் இக்ரமுல்லா கந்தபூர், நேற்று தேர்தல் பிரசாரத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

தேரா இஸ்மாயில்கான் என்ற இடத்தில் அவரது வாகனம் மீது வெடிகுண்டுகளை தன் உடலில் கட்டி எடுத்து வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் மோதினார். அப்போது குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியே குலுங்கியது. பெரும் புகை மண்டலமும் உருவானது.

இந்த குண்டுவெடிப்பில் இம்ரமுல்லா கந்தபூர், படுகாயம் அடைந்தார். அவரது கார் டிரைவரும், பாதுகாவலரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

படுகாயம் அடைந்த இக்ரமுல்லா கந்தபூர், ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் கைபர் பக்துங்வா மாகாணத்தில் விவசாயத்துறை மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தேர்தல் வன்முறை சம்பவங்கள் பாகிஸ்தானில் தொடர்வது அரசியல்வாதிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் பொதுமக்களிடமும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எந்த நேரத்தில் எங்கு குண்டுவெடிப்பு நடக்குமோ, துப்பாக்கிச்சூடு நடக்குமோ என அவர்கள் கதிகலங்கிப் போய் உள்ளனர்.

எனவே பதற்றமான இடங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com