தீவிரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதை உறுதிபடுத்திய அந்நாட்டு அமைச்சர்

தீவிரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி உறுதிபடுத்தி உள்ளார்.
தீவிரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதை உறுதிபடுத்திய அந்நாட்டு அமைச்சர்
Published on

கராச்சி

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கடந்த 14-ந் தேதி சென்று கொண்டிருந்த துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டது. இந்த இயக்கத்தின் தலைவனாக மவுலானா மசூத் அசார் இருந்து வருகிறான்.

மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகளின் அதிகாரப்பூர்வ தடை, உலகளவில் பயணம் செய்ய தடை மற்றும் சொத்துகளை முடக்க 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் கோரிக்கை விடுத்து உள்ளன.

காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பில் கோஷ்டி மோதலை தீர்த்து வைக்க காஷ்மீர் வந்த பயங்கரவாதி மசூத் அசாரை 1994-ல் இந்திய பாதுகாப்பு படை கைது செய்தது. இதனையடுத்து 1999-ம் ஆண்டு நேபாளத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்திய அரசால் அவன் விடுவிக்கப்பட்டான். 180 பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பயங்கரவாதிகள் மூவரை விடுதலை செய்ய அப்போதைய வாஜ்பாய் அரசு சம்மதம் தெரிவித்தது.

இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து, பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி கூறியதாவது :-

அவருக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை. அவர் தனது வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு இருக்கிறார், ஏனென்றால் அவருக்கு உண்மையில் உடல்நிலை சரியில்லை.

"அவர்கள் (இந்தியா) பாகிஸ்தானின் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய திடமான, நிரூபிக்ககூடிய ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் கொடுக்கலாம். அதனால் நாங்கள் மக்களை சமாதானப்படுத்த முடியும். பாகிஸ்தானின் சுயாதீனமான நீதித்துறையை அணுக முடியும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com