

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர், மசூதி வளாகத்திற்குள் நுழைய முயன்றார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், மசூதியில் இருந்தவர்கள் வாசல் அருகே அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். சுமார் 169 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் தெஹ்ரிக்-இ-தலீபான் இயக்கத்துடன் தொடர்புடைய பிட்னா அல்-குவாராஜி அமைப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என பாகிஸ்தான் போலீசார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக நேற்று பாகிஸ்தான் சென்றார். அவர் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.