

இஸ்லமாபாத்,
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கியதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 28ந் தேதி பதவி விலகினார்.
இதைத்தொடர்ந்து புதிய பிரதமராக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷாகித் ககான் அப்பாசி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றதையடுத்து ஷாகித் கான் அப்பாசி பிரதமராக நியமனம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை பாகிஸ்தான் பிரதமராக அப்பாஸி முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
இஸ்லமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக அப்பாஸி பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து 46 பேர் கொண்ட மந்திரிசபையும் பதவி ஏற்றது. காவ்ஜா முகம்மது ஆசிப் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். ஆசன் இக்பால், முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். பாதுகாப்புத்துறை மந்திரியாக குர்ரம் தாஸ்டகிர் பதவி ஏற்றுள்ளார்.