பதவிக்கு ஆபத்து...! 3 வது மனைவி பிரிந்தார்...! இம்ரான் கானுக்கு வந்த சோதனை

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பின் கீழ் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ளன.
பதவிக்கு ஆபத்து...! 3 வது மனைவி பிரிந்தார்...! இம்ரான் கானுக்கு வந்த சோதனை
Published on

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பின் கீழ் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

இதற்கு தலைமைப் பொறுப்பு ஏற்க, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்து விட்டார். அதனால், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி தலைவர் ஆவார் என, தெரிகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால், இம்ரான் கான் பதவி விலகி, ஆசிப் அலி சர்தாரி பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இம்ரான் கானுக்கு அடுத்த அடியாக அவரை விட்டு அவரின் மூன்றாவது மனைவி, புஷ்ரா மனேகா பிரிந்து தனியே வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்ரான் கான், ஜெமீமா கோல்டுஸ்மித், ரெஹம் கான் ஆகியோரை மணந்து பிரிந்தவர். கடந்த, 2018ல் புஷ்ரா மனேகா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். புஷ்ராவுக்கு முன்னாள் கணவர் வாயிலாக, ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்கள் யாரும் தன் வீட்டிற்கு வரக் கூடாது என, இம்ரான் கான் திருமணத்திற்கு முன்னரே புஷ்ராவுக்கு நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

அதை மீறி புஷ்ராவின் மூத்த மகன் அவ்வப்போது வீட்டிற்கு வந்தது, இம்ரான் கானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, மனைவியுடன் மோதல் ஏற்பட வழி வகுத்ததாக கூறப்படுகிறது.மேலும், இம்ரான் கான் ஆசையாக வளர்த்த நாய்களை, தன் மதச் சடங்குகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி புஷ்ரா வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுவும், கணவன் - மனைவி இடையே விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் புஷ்ரா திடீரென இம்ரான் கானின் 'பானி கலா' மாளிகையில் இருந்து வெளியேறி, லாகூரில் உள்ள ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்று விட்டதாக உள்ளூர் மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com